தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் இன்று இரவு பீர்க்கன்காரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குண்டுமேடு சுடுகாடு அருகே நீண்ட நேரமாக சாரைப்பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா, அங்கிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயன்றார். இந்த காட்சிகளை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இரவு நேரத்தில் சுடுகாடு அருகே பாம்பு தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், துணிச்சலாகச் சென்று பாம்பை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், பாம்பை அடித்து காயப்படுத்துவதற்குப் பதிலாக, வனத்துறையினர் அல்லது பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் அதனை பாதுகாப்பாக மீட்டு, பொதுமக்கள் வசிக்காத பகுதியில் விடப்பட்டிருக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் காவல் உதவி ஆய்வாளரின் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், பாம்பை பிடிக்க முயன்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இது தொடர்பான காட்சிகள் நமது My Chengai யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளது.













