உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவும் ஜப்பானும் முன்னின்று உலகை வழிநடத்தும் என்று ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சியுடனான சந்திப்பிற்குப் பிறகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்ற 16-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர கூட்டு உச்சிமாநாட்டில், ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே டகாய்ச்சிக்கு (Sanae Takaichi) பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்புப் பேச்சுவார்த்தையில், சர்வதேசப் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பிராந்தியக் கூட்டுறவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த எக்ஸ்க்ளூசிவ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் பரஸ்பர நம்பிக்கையே இரு நாடுகளுக்கும் இடையேயான மிகப்பெரிய சொத்தாகும்; இந்தியாவின் மென்பொருள் ஆற்றலும் (Software capability), ஜப்பானின் துல்லியமான தொழில்நுட்பத் திறனும் (Precision technology) இணைவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கு புதிய வேகத்தையும் பலத்தையும் கொடுக்கும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் விநியோகத் தொடர் கட்டமைப்பை வலுப்படுத்த ‘கூட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு பிரகடனம்’ வெளியிடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் துறையில் ராணுவத் தளவாடங்களை முதன்முறையாகக் கூட்டுத் தயாரிப்பு செய்வதற்கான ராணுவ ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதுமட்டுமன்றி, இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ‘இந்தியா-ஜப்பான் பயோ-கேஸ்’ திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 1,000 உயிரி எரிவாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.













