மின் இணைப்புக்கு ரூ.2 லட்சம் கேட்பதாகவும், 10 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் வேல்முருகன் கூலி வேலை செய்து வருகிறார். தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் வங்கிக் கடன் மூலம் சுமார் ரூ.25 லட்சம் செலவில் வீடு ஒன்றை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சுமார் 10 மாதங்களுக்கு முன்பு மாம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்ததாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி இதுவரை மின் இணைப்பு வழங்காமல், அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மின் இணைப்பு பெறுவதற்காக ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் வலியுறுத்தியதாகவும், வேல்முருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளதால், அந்த தொகையை செலுத்த முடியாது என பலமுறை தெரிவித்தும், மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். அதில், மாம்பாக்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், தன்னிடம் ரூ.2 லட்சம் தொகை செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், அந்த தொகையை செலுத்த முடியாத நிலையில் மின் இணைப்பு வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டா இல்லாத புறம்போக்கு இடங்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு மின் இணைப்புகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் தன்னிடம் முறையான பட்டா ஆவணங்கள் இருந்தும் மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வீட்டை கட்டி முடித்தும் மின் இணைப்பு இல்லாமல் குடும்பத்துடன் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து மின் இணைப்பு மறுக்கப்பட்டால், தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேல்முருகன் புகாரில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இந்த புகாரை மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து, மின் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள 10 மாத காலதாமதத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், ரூ.2 லட்சம் கோரப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
#மின்இணைப்பு #மின்இணைப்புக்குரூ2லட்சம் #மின்வாரியம் #மாம்பாக்கம் #கொளத்தூர் #செங்கல்பட்டு #மின்வாரியபுகார் #மின்வாரியகுறைதீர்க்கும்கூட்டம் #லஞ்சப்புகார் #மின்இணைப்புதாமதம் #வேல்முருகன் #மின்சாரவாரியம் #மின்சாரஇணைப்பு #பட்டாநிலம் #வங்கிக்கடன் #புதியவீடு #பொதுமக்கள்புகார் #செங்கல்பட்டுசெய்திகள் #தமிழ்நாடுசெய்திகள் #மின்வாரியஅதிகாரிகள்












