Advertisement

பெரியவெளிக்காட்டில் இருளர் வீடுகள் திறக்க தாமதம்

பவுஞ்சூர் அடுத்த பெரியவெளிக்காடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 12 இருளர் குடும்பங்களுக்கான அரசு தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே உள்ள பெரியவெளிக்காடு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 20க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், அரசு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், 2022-ம் ஆண்டு பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 இருளர் குடும்பங்களுக்கு தலா ரூ.4.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, அனைத்து பணிகளும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால், பயனாளிகள் குடியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் புதிய வீடுகள் காலியாகவே இருந்து வருகின்றன. மேலும், நீண்ட காலமாக வீடு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த இருளர் குடும்பங்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி, பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement