Advertisement

வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி? முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அருகே வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்றதாக கூறப்படும் பெண்ணால் ஏமாற்றப்பட்ட மன உளைச்சலில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (73), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தனது பூர்வீக நிலத்தை விற்று கிடைத்த பணத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டிருந்தார்.

Advertisement

இதற்காக அதே குடியிருப்பில் வசித்து வந்த தனது உறவினரான கலைவாணி (35) என்பவரை அணுகியதாக கூறப்படுகிறது. அவர் வீடு வாங்கித் தருவதாக உறுதியளித்து, பல தவணைகளில் விஸ்வநாதனிடமிருந்து சுமார் ரூ.10 லட்சம் வரை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நீண்ட நாட்கள் கடந்தும் வீடு கிடைக்காததால் சந்தேகமடைந்த விஸ்வநாதன், பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த விஸ்வநாதன், இரண்டு தினங்களுக்கு முன்பு எலி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் உயிரிழப்புக்கு பண மோசடி காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement