Advertisement

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் கருடசேவை கோலாகலம்

மறைமலைநகர் அருகே உள்ள பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று விமரிசையாக நடைபெற்றது.

சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த பிரசித்திபெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், கடந்த 21ஆம் தேதி வைகாசி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் உற்சவர் பிரகலாதவரதர் புண்யகோடி விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நேற்று காலை நடைபெற்ற கருடசேவை விழாவில், அதிகாலை 5.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் உற்சவர் பிரகலாதவரதர் எழுந்தருளினார். பின்னர் கோபுர வாசலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் வாணவேடிக்கைகளுடன் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடசேவையை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் புறப்பாடு நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement