Advertisement

நந்திவரத்தில் தாகம் தணிக்க வந்த மான்கள்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வந்த மூன்று புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விட்ட சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியை ஒட்டிய மலை மற்றும் வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. கோடை வெப்பம் மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவு போன்ற காரணங்களால் அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைவது வழக்கமாக உள்ளது.

Advertisement

இந்நிலையில், நேற்று காலை நந்திவரம் திருவள்ளுவர் தெருவில் உள்ள பாரதி என்பவரின் வீட்டருகே அமைந்திருந்த செடிகள் மற்றும் புதர்களுக்குள் மூன்று புள்ளி மான்கள் தஞ்சமடைந்திருந்தன. அவற்றைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மான்கள் அச்சமடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் அவற்றை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பாக கண்காணித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாரதி, கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மூன்று புள்ளி மான்களையும் பாதுகாப்பாக பிடித்து மீட்டனர். பின்னர் அவற்றிற்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மான்கள் இயற்கை சூழலில் விடப்பட்டன.

கோடை காலங்களில் வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை வனப்பகுதிகளில் அதிகரிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement