Advertisement

நடுவக்கரையில் சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீர்படுத்த கோரிக்கை

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நடுவக்கரை ஊராட்சியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை அகற்றி புதியதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுவக்கரை ஊராட்சிக்குட்பட்ட கருமாரப்பாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை விட்டிலாபுரம், புதுப்பட்டினம், அமிஞ்சிக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் நிழற்குடையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் நிற்க அச்சப்படுகின்றனர்.

குறிப்பாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வெயில் மற்றும் மழையில் சாலையோரத்தில் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பழுதடைந்த நிழற்குடையை உடனடியாக இடித்து அகற்றி, பாதுகாப்பான புதிய பேருந்து நிழற்குடை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement