Advertisement

முடிச்சூர் ஏரியில் மீண்டும் குப்பை; போராட்டத்துக்கு வண்டலூர் மக்கள் தயார்

வண்டலூர் பகுதியில் உள்ள முடிச்சூர் ஏரிக்கரையில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் ஊராட்சியின் முதல் வார்டில் உள்ள ‘ஹில் வியூ’ குடியிருப்பு பின்புறம், சுமார் 112 ஏக்கர் பரப்பளவில் முடிச்சூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, வண்டலூர் பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

ஆனால், முடிச்சூர் ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ஏரிக்கரையில் தினமும் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ‘ஹில் வியூ’ குடியிருப்பில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, துர்நாற்றம், கொசுத் தொல்லை, மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஏரிக்கரையில் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் செய்தி வெளியீட்டின் பின்னர் அகற்றப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக மீண்டும் அதே இடத்தில் குப்பை கொட்டப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Advertisement

இதுகுறித்து கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ஏரியை பாதுகாக்கவும், குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி விரைவில் பெரிய அளவிலான போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement