Advertisement

“நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு” – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நீட் மற்றும் EWS இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க அரசை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது என்றும், பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்துத் திராவிடர் கழகத்தின் பிரச்சாரப் பயணத்திற்குத் தடை விதித்ததன் மூலம் “சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவிதான்” என்பது உறுதியாகிவிட்டது என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் இருந்து தொடங்கப்படவிருந்த நீட் மற்றும் EWS எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் தவெக அரசு காவல்துறை மூலம் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துப் பலத்த போலீஸ் பாதுகாப்பைக் குவித்து முடக்கியுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் சுடச்சுட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தவெக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார்.

Advertisement

அவரது அறிக்கையில், “நீட், EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க அரசைவிடத் த.வெ.க அரசுதான் அதிகம் மிரளுகிறது! தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க அரசு பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவிதான் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதியைத் த.வெ.க அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்” என ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடித் தாக்குதல் தவெக அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement