கைலாஷ் யாத்திரை பக்தர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களின் நிலை குறித்து இதுவரை உரிய தகவல் கிடைக்காததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சீன எல்லையில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக கும்பகோணத்தில் இருந்து 57 பேரும், சென்னை குரோம்பேட்டை பகுதியிலிருந்து 49 பேரும் நேபாளம் வழியாக ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் முதல் பேருந்தில் பயணித்த 21 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்காமல் தப்பித்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற இரண்டு பேருந்துகளில் பயணித்த பக்தர்கள் மற்றும் குரோம்பேட்டை குழுவைச் சேர்ந்த 49 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.
எல்லைப் பகுதியான ரசுவாகடி குடிவரவு அலுவலகம் அருகே வெள்ளத்தில் சிக்கியபோது பாலம் அடித்துச் செல்லப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள் இதுவரை சீனா அல்லது நேபாள எல்லைக்குள் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து மனு அளித்தும் உரிய விரைவு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கும்பகோணம் மற்றும் குரோம்பேட்டை பக்தர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களை உயிருடன் மீட்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#கைலாஷ்யாத்திரை #கைலாஷ்மானசரோவர் #பக்தர்கள் #நேபாளம் #வெள்ளப்பெருக்கு #நிலச்சரிவு #தமிழ்நாடு #கும்பகோணம் #குரோம்பேட்டை #சிங்கப்பெருமாள்கோவில் #உண்ணாவிரதப்போராட்டம் #KailashYatra #KailashMansarovar #Devotees #Nepal #Flood #Landslide #TamilNadu #Kumbakonam #Chromepet #SingaperumalKoil #Protest












