Advertisement

“விளாத்திகுளம் எம்.எல்.ஏ. கைது சட்டப்பூர்வமானதே!”– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்!

பொதுவெளி மேடையில் முதலமைச்சருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும், கைதுக்கு பயந்து திமுகவினர் தினமும் புதுப்புது ‘டிராமா’ செய்து வருவதாகவும் தமிழகச் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டைப் பேட்டியாகத் தெளிவுபடுத்தினார்.

Advertisement

“கொலை மிரட்டல் பேச்சுக்கு சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது”:
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொதுமேடையில் நின்று முதலமைச்சரின் கையை உடைப்பேன் எனக் கொலை மிரட்டல் விடுப்பதும் அவதூறாகப் பேசுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும். அப்போது தவெக தொண்டர்கள் அங்கு இருந்தால் தேவையற்ற கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கும். எனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை சட்டப்படி அவரைக் கைது செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ.வின் உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறுவதெல்லாம் அசாத்திய நாடகம். கரூர்க்காரர் செந்தில் பாலாஜி கட்டிலுக்குக் கீழே சென்று அழுதார்; இன்று இந்த எம்.எல்.ஏ. காரில் ஏறியதும் மயக்கம் வருகிறது என்கிறார். இப்படித் தொடர் டிராமா செய்து கொண்டிருந்தால் காவல்துறை எப்படித் தனது கடமையைச் செய்ய முடியும்? கடந்த கால திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக 70 வயது பாட்டியைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்து குண்டாஸ் போட்ட வரலாறை யாரும் மறந்துவிட முடியாது” எனத் தோலுரித்தார்.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர், “நீட் தேர்வு நமக்குத் தேவையில்லை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அது மாணவர்களுக்கு எதிரானது. கடந்த திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் ‘நீட்டை ஒழிக்க ரகசியம் இருக்கிறது’ எனப் பொய் கூறியது போல் நாங்கள் மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையைக் கொடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வந்த இத்தேர்வை சட்டப்பூர்வமாக மட்டுமே ரத்து செய்ய முடியும். இப்போராட்டம் குறித்துக் கட்சியின் சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சட்ட வல்லுநர்களுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 7 முதல் 10 நாட்களில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட அதிரடி சட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்” என்றார்.

Advertisement

தொடர்ந்து மின்சாரத் துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் கணக்கீடு அதிகமாக வந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அங்கு மீண்டும் மறு மின் கணக்கீடு (Re-assessment) செய்ய உத்தரவிட்டுள்ளேன். மின் கணக்கீட்டாளர்கள் 5,500 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 800 பேர் மட்டுமே இருப்பதால், பணியாளர்கள் ஏதேனும் தவறு செய்துள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகக் கட்டணம் செலுத்தியிருந்தால் அத்தொகை டிஜிட்டல் முறையில் வைப்புத் தொகையாக (Deposit) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது தொடர்பாக நாளை மின்வாரிய அதிகாரிகளுடன் அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது” என உறுதியளித்தார்.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement