வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய மக்கள் நல அறிவிப்புகள் வெளியாகும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காக முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் எவையும் நிறுத்தப்படாது என்றும், அவற்றை மேலும் மேம்படுத்துவதே த.வெ.க. அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்துப் பிரபல மருத்துவர் வருண் குணசேகரன் எழுதிய புதிய புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுப் பேசினார். அப்போது தற்கால வாழ்வியலில் மன அழுத்தம் காரணமாகப் பலர் தற்கொலை முடிவுகளை எடுப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நீட் போன்ற விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை எவ்வித்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப் பள்ளிக் கல்விப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நிலைப்பாடாகும் என்றும், ‘உணவே மருந்து’ என்ற பாரம்பரிய வாழ்க்கை முறையே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் தங்களின் தினசரி உணவில் புரோட்டீன் சத்து நிறைந்த பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சூடான உணவுப் பொருட்களைப் பிளாஸ்டிக் பைகளில் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் இனிப்பு வகைகளை வாங்கிச் செல்வதைத் தவிர்த்து, ஆரோக்கியம் தரும் பழங்களை வாங்கிச் செல்லும் புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், ஆரோக்கியமான வாழ்வியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கத் த.வெ.க. அரசு தொடர்ந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நவீன முழு உடற்பரிசோதனை (Master Health Check-up) திட்டத்தைப் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குரிய நிதி ஒதுக்கீடு வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அறிவித்தார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், செயற்கை முறையில் செரிவூட்டப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அப்பளங்கள் மனித உடலுக்குக் கடுமையான கேடு விளைவிப்பவை என்பதால், அவற்றை முற்றிலும் தடை செய்யத் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 முதல் 150 இடங்கள் வழக்கம் போல் தக்கவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் காலங்களில் மருத்துவ இடங்களை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதுமட்டுமன்றி, தற்போது வரை அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத எஞ்சிய மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் நிச்சயமாகத் த.வெ.க. அரசால் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் உறுதிபடத் தெரிவித்தார்.












