இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் வெளியானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
🚨 மெட்டாவுக்கு 7 நாள் கெடு விதித்த ஒன்றிய அரசு
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டவிரோத விளம்பரங்கள் வெளியானதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வில், குறிப்பிட்ட ஆபத்தான தேடல் வார்த்தைகளை பயன்படுத்தும்போது, பயனர்களை சட்டவிரோத டெலிகிராம் சேனல்களுக்கு வழிநடத்தும் விளம்பரங்கள் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
⚠️ அனைத்து சட்டவிரோத உள்ளடக்கங்களையும் உடனே நீக்க உத்தரவு
இந்த விவகாரத்தில், குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து பதிவுகள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதுகுறித்து 7 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களை பயனர்களுக்கு பரிந்துரைக்கும் அல்லது காட்டும் தொழில்நுட்ப செயல்முறைகளையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம், குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு தங்களது தளத்தில் எந்தவித இடமும் இல்லை என்றும், இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
⚖️ விளக்கம் அளிக்காவிட்டால் கடும் சட்ட நடவடிக்கை
மத்திய அரசின் நோட்டீஸுக்கு உரிய காலத்திற்குள் பதிலளிக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோத உள்ளடக்கங்களை தடுக்க வலுவான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.












