Advertisement

மண்ணிவாக்கம்: கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் இருந்து மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு செல்லும் அணுகுச்சாலையில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

வாலாஜாபாத் – வண்டலூர் சாலையில் உள்ள மண்ணிவாக்கம் சந்திப்பிலிருந்து மீஞ்சூர் வெளிவட்ட சாலையை இணைக்கும் சுமார் 500 மீட்டர் தூர அணுகுச்சாலை முக்கிய போக்குவரத்து பாதையாக பயன்பட்டு வருகிறது. இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

குறிப்பாக, சென்னை துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த அணுகுச்சாலையை பயன்படுத்துகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சில பேனர்கள் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்று கடந்த ஒரு வாரமாக கிழிந்து சாலையின் அருகே தொங்கியபடி இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். காற்றின் வேகத்தில் பேனர் சாலையில் விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும், விளம்பர பேனர்கள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் நெடுஞ்சாலைத்துறையின் விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன டிரைவர்கள் பெரும் சிரமத்துடன் பயணம் செய்கிறார்கள்.

எனவே, பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement