திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை சினிமா பாணியில் காரில் கடத்திய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
❤️ காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27) மற்றும் மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டியைச் சேர்ந்த சித்திரைவள்ளி (26) ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 25 அன்று வயலூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு சித்தாநத்தத்தில் வசித்து வந்தனர். இதையடுத்து, மகள் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக சித்திரைவள்ளியின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
🚗 தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் கடத்தல்
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக நேற்று தம்பதியினர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜராகினர். விசாரணை முடிந்து உறவினர்களுடன் பயணிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி அருகே பின்னால் வந்த கார் ஆட்டோவை வழிமறித்தது. காரிலிருந்து இறங்கிய சிலர் அஜித்குமாரை தாக்கிவிட்டு, சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, யாகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரைவள்ளியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
⚖️ உறவினர்கள் 3 பேர் கைது.. மேலும் விசாரணை தீவிரம்
போலீசாரிடம் சித்திரைவள்ளி அளித்த வாக்குமூலத்தில், சாதி காரணமாக தங்களது காதல் திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும், தங்களைப் பிரித்து கொலை செய்யும் நோக்கத்திலேயே உறவினர்கள் தாக்கி கடத்திச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெண்ணின் உறவினர்களான முருகேசன் (38), மலைச்சாமி (29), பிரகாஷ் (28) ஆகிய மூவரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.













