ராஜகோபுரம் அமைக்க முடியாத நிலையில், திறந்தவெளியாக உள்ள அடித்தளத்தின் மேற்பகுதியில் கலையம்ச தளம் அமைத்து பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
🛕 ராஜகோபுர அடித்தளம் மட்டும் அமைப்பு
மாமல்லபுரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வைணவ 108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக விளங்கும் இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலின் நுழைவாயில் பகுதியில் ராஜகோபுரம் அமைப்பதற்காக கலையம்சத்துடன் கூடிய அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது கோபுரம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அடித்தளத்தின் மேற்பகுதி திறந்தவெளியாக காணப்படுகிறது.
🏛️ பாரம்பரியத்தை பாதுகாக்க உயரமான கோபுரம் வேண்டாம்
கோவில் வளாகத்தில் உபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு அருகில் மாமல்லபுரத்தின் முக்கிய பாரம்பரிய நினைவுச்சின்னமான அர்ஜுனன் தபசு சிற்பம் அமைந்துள்ளது. இப்பகுதியின் பாரம்பரியத் தன்மையை கருத்தில் கொண்டு, உயரமான ராஜகோபுரம் அமைக்க வேண்டாம் என தொல்லியல் வல்லுநர் குழுவினர் அறிவுறுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
🌿 திறந்தவெளி அடித்தளத்தை மூட கோரிக்கை
ஆழ்வார்களால் போற்றிப் பாடப்பட்ட திவ்ய தேச கோவில், நுழைவாயில் கோபுரம் இல்லாமல் இருப்பதுடன், தற்போது கோபுர அடித்தளத்தின் மேற்பகுதியில் செடிகள் படர்ந்து வருகின்றன. தொடர்ந்து பராமரிக்கப்படாத நிலையில், அடித்தளம் படிப்படியாக சீரழியும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உயரமான கோபுரம் அமைக்க வாய்ப்பில்லாத நிலையில், பாரம்பரிய கட்டடக்கலைக்கு ஏற்ற வகையில் அடித்தளத்தின் மேற்புற திறந்தவெளியை கலையம்ச தளம் அமைத்து மூடி பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.













