உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாமல்லபுரம் கடற்கரை, ஐந்து ரதம், ஒத்தவாடை தெரு, பூஞ்சேரி, பையனூர், திருவிடந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து பல்வேறு வழிகளில் கஞ்சா கடத்தப்பட்டு, உள்ளூர் முகவர்கள் மூலம் சிறு பொட்டலங்களாக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் அவ்வப்போது கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கஞ்சா விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், கஞ்சா பயன்பாட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு குற்றச் செயல்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மாமல்லபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












