Advertisement

“கோயில் திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!” – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

கோயில் திருவிழாக்களின் போது யாருக்கும் எந்தவிதமான ‘முதல் மரியாதை’ அல்லது பிரத்யேக முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றும், அனைத்துச் சமூகத்தினரும் சமமாக நடத்தப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராமக் கோயில் திருவிழாக்கள் நடைபெறும்போது முதல் மரியாதை வழங்குவது தொடர்பாகவும், குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாகவும் உருவாகும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவும், சமூக மோதல்களாகவும் உருவெடுக்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இறைவனின் திருமுன்பு மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே. எனவே, கோயில் திருவிழாக்கள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளின் போது தனிநபர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ ‘முதல் மரியாதை’ செலுத்தும் நடைமுறைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சாதி, சமூக வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் சமமான முறையில் மதிக்கப்படுவதையும், வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படாமல் இருப்பதைத் இந்து சமய அறநிலையத் துறையும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்” எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைவதற்கும், கோயில் வழிபாடுகளில் சமூகச் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் வழிவகுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த முற்போக்கானத் தீர்ப்பு, பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement