அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு (Paid Menstrual Leave) வழங்குவது தொடர்பான விதிகளை உருவாக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் உறுப்பினர்கள் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள், மாதவிடாய் காலங்களில் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் வலியுடன் பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. பீகார், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை அமலில் உள்ளது. எனவே, தமிழகத்திலும் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழுமையான ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், அதற்கான கொள்கையை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது மற்றும் அதற்கான விதிகளை உருவாக்குவது தொடர்பாக மாநில அளவில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் தேவை” எனத் தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மாதவிடாய் விடுப்பு தொடர்பான விதிகளை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் விதிகளின் முன்னேற்றம் குறித்தான இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.












