செங்கல்பட்டு ஹோட்டலில் தடையில்லா மது விற்பனை: மது விற்பனை தொடர்பாக செங்கல்பட்டில் உள்ள தனியார் ஹோட்டல் மீது புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் ஹோட்டல் பாரில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த பலரும், கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, பார்களுடன் இயங்கும் சில தனியார் ஹோட்டல்களில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அங்குமுத்து தியேட்டர் எதிரே உள்ள காஞ்சி ஹோட்டல் பாரில் கதவை மூடிக்கொண்டு கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அங்கு ஒரு பீர் ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், ஒரு முழு மதுபான பாட்டில் ரூ.3,000 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அந்த ஹோட்டல் பாரில் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உரிமம் பெற்ற பாரில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யாமல், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படும் புகார் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#செங்கல்பட்டு #டாஸ்மாக் #டாஸ்மாக்_கடையடைப்பு #மது_விற்பனை #மது_விற்பனை_புகார் #காஞ்சிபுரம் #டாஸ்மாக்_ஊழியர்கள் #போராட்டம் #தனியார்_ஹோட்டல் #மதுப்பிரியர்கள்













