தென்னிந்தியத் திரை உலகின் நைட்டிங்கேல் என்றும், ரசிகர்களின் ஏகோபித்த ‘இசையரசி’ என்றும் போற்றப்படும் மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (வயது 88) அவர்கள் காலமானார். கர்நாடக மாநிலம் மைசூருவில் வசித்து வந்த அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது காந்தக் குரல் இன்று ஒய்ந்தது. அண்மையில் கடந்த ஜனவரி மாதம்தான் அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா காலமானார் என்ற சோகம் தாளாமல் இருந்த நிலையில், தற்போது ஜானகி அம்மாவின் இந்த மறைவுச் செய்தி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1938ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, தனது இளம் வயதிலேயே அசாத்திய இசைத் திறமையைக் வெளிப்படுத்தினார். 1956இல் நடைபெற்ற அகில இந்திய வானொலி இசைப்போட்டியில் பங்கேற்று அப்போதைய குடியரசுத் தலைவரிடமிருந்து நேரடியாகப் பரிசு பெற்ற பெருமைக்குரியவர். அதனைத் தொடர்ந்து, 1957இல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படம் மூலம் தனது 19ஆவது வயதில் பின்னணிப் பாடகியாகத் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அதே ஆண்டிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் பாடி புகழ்பெற்ற பாடகியாகத் தன்னைத் நிலைநிறுத்திக் கொண்டார். 1957 முதல் 2017 வரை சுமார் 60 ஆண்டுகள் தலைமுறைகள் கடந்து திரை உலகில் கோலோச்சிய அவர், அதன் பின்னரே பாடுவதில் இருந்து முழுமையாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இன்றைய அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் கீழ் பாடியுள்ள ஜானகி அம்மாள், இசைஞானி இளையராஜாவின் அறிமுகப் படமான ‘அன்னக்கிளி’ திரைப்படத்திலேயே 3 பாடல்களைப் பாடி அசத்தியவர். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த இளையராஜா – எஸ்பிபி – எஸ்.ஜானகி கூட்டணியின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவியங்களாகும். 17 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசாத்திய சாதனை படைத்த இவர், ஹிந்தி மொழியிலும் அதிகப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்தியப் பாடகி என்ற பெருமையைப் பெற்றவர். சாதாரணப் பாடல்கள் மட்டுமின்றித் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடும் பன்முகத் திறமையும் அவரிடம் இருந்தது. மேலும், ஒரு குழந்தையின் குரலிலும், அச்சு அசலாக ஓர் ஆண் குரலிலும் பாடக்கூடிய அபூர்வமான தனித்திறமை ஜானகி அம்மாவின் ஸ்பெஷல் ஆகும்.
தனது அசாத்திய கானக் குரலுக்காக 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளை வென்று முத்திரை பதித்தார். 1977இல் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே’ பாடலுக்காகவும், 1981இல் ‘ஓப்போள்’ என்ற மலையாளப் படத்தில் ‘ஏற்றுமானூர் அம்பலத்தில்’ பாடலுக்காகவும், 1984இல் ‘சிதாரா’ தெலுங்குப் படத்தில் ‘வெண்ணல்லோ கோதாரி’ பாடலுக்காகவும், இறுதியாக 1992இல் வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் உலகநாயகன் கமலுடன் இணைந்த பாடிய ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலுக்காகவும் தேசிய விருதுகளை அள்ளினார். இதுதவிர, தமிழக அரசின் உயரிய கலைமாமணி பட்டம் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில அரசாங்கங்களிடமிருந்து 33 மாநில விருதுகளையும் குவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்ம பூஷண்’ விருதை அறிவித்தபோது, இந்த உயரிய அங்கீகாரம் தனக்கு மிகத் தாமதமாகக் கிடைப்பதாகக் கூறி அதனை ஏற்க மறுத்த அவரது துணிச்சல் ஒட்டுமொத்தத் திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களை ஆவராணம் செய்த அந்தத் தென்னிந்தியத் திருநாட்டின் இசைக்குயிலின் குரல் இன்றுடன் மௌனமாகிப் போனாலும், அவர் பாடிச் சென்ற பல்லாயிரக்கணக்கான பாடல்களின் வழியே அவரது நினைவுகள் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.












