Advertisement

புத்துயிர் பெறும் கொளவாய் ஏரி; ஆகஸ்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான கொளவாய் ஏரியை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமடைந்திருந்தன.

2,210 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொளவாய் ஏரி, செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். குண்டூர் மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் இந்த ஏரியை வந்தடைகிறது. ஒருகாலத்தில் இயற்கை எழில் மிக்க நீர்நிலையாக விளங்கிய இந்த ஏரி, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படகு குழாம் சேவையும் பின்னர் நிறுத்தப்பட்டது.

Advertisement

ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, செயற்கை தீவு, படகு சவாரி, குழந்தைகள் பூங்கா, உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற 2020-ஆம் ஆண்டு ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2021-ல் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், வெறும் 22 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்தன.

ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மூடுகால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.4.52 கோடி நிதி ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மூடுகால்வாய் பணிகள் முடிந்து ஏரியில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதும், ஆகஸ்ட் மாதத்தில் கொளவாய் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement