Advertisement

ஊரப்பாக்கம்: அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தரக் கோரி ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீரப்பாக்கம், முருகமங்கலம் மற்றும் அருங்கால் கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,760 வீடுகள் கொண்ட குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள், மொபைல் போன் டவர் வசதி, சிசிடிவி கேமரா, குடிநீர் விநியோகம், போலீஸ் பூத், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் ஆம்புலன்ஸ், மக்கள் மருந்தகம், சுற்றுச்சுவர், மின் மயானம், பேருந்து நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

இந்த மறியல் காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement