Advertisement

“3 நாட்களாகியும் முதல்வர் மவுனம்!” – சபரிவர்மன் குடும்பத்தை சந்தித்த கனிமொழி!

நாகர்கோவில் கிளை சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களைக் கடந்த பின்னரும், காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜயிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கையோ வராதது ஏன் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாகர்கோவில் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற கனிமொழி எம்பி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், சபரிவர்மனின் தாய் மற்றும் உறவினர்களைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய அவர், திமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தங்களது முழுமையான ஆதரவை உறுதியளித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, தற்போதைய தவெக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், காவல்துறையின் அத்துமீறல்களை சாடியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனிமொழி எம்பி, “ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் சிறைக்காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவரது உடம்பில் 19 காயங்களுடன் மரணமடைந்த கொடூரம் நடந்து மூன்று நாட்களாகிவிட்டன. ஆனால், இதுவரை முதலமைச்சர் ஜோசப் விஜயோ அல்லது தவெக அரசின் எந்தவொரு அமைச்சரோ பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் வந்து பார்க்கக் கூட மனமில்லாமல் மௌனம் காப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு இதுவரை இடைக்கால நிவாரண நிதியுதவி வழங்கக் கூட இந்த அரசு முன்வரவில்லை என்பது வேதனையின் உச்சம்” என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

தவறு செய்த காவலர்கள் மீது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகக் கைது படலத்தை அரங்கேற்றாமல், இந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த அரசு வேலையும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் தவெக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கனிமொழி தனது பேட்டியில் மிகத் திட்டவட்டமாக வலியுறுத்தினார். கனிமொழியின் இந்த நேரடி விசிட்டும், தவெக அரசுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement