Advertisement

“21 கத்திப் படிகளில் ஏறி நின்று அருள்வாக்கு!” – பரவசமூட்டிய பூசாரி; திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் ஊராட்சியில் அருள் பாலித்து வரும் புகழ்பெற்ற ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 21 கூர்மையான கத்திப் படிகளில் ஏறி பூசாரி அருள்வாக்கு வழங்கும் அபூர்வ நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆடி மாத திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் மிக விமரிசையாகத் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், ஆன்மீக வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இத்திருவிழாவின் உச்சகட்ட மற்றும் பிரம்மாண்ட நிகழ்வான மூன்றாம் ஆண்டு ‘கத்தி ஏறுதல்’ வைபவம் இன்று வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு மர ஏணி அமைப்பில், 21 கூர்மையான கத்திகள் படிகளாகப் பொருத்தப்பட்டிருந்தன.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்வாக, சாமி வந்து ஆடிய கோவில் பூசாரி எந்தவிதப் பயமுமின்றி அந்த 21 கூர்மையான கத்திப் படிகளின் மீதும் ஒவ்வொன்றாகக் கால்களை வைத்து ஏறி உச்சியில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். கத்தியின் மீது நின்று பூசாரி அருள்வாக்கு கூறியபோது, அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகள், தொழில் நஷ்டம், தீராத நோய்கள் மற்றும் திருமணத் தடை போன்ற குறைகளைக் கூறி முறையிட்டனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பூசாரி, பரிகாரப் பிரசாதமாகப் பூ மற்றும் எலுமிச்சம்பழங்களை வழங்கினார்.

கிராமப்புற மக்களின் மாறாத ஆன்மீக நம்பிக்கையைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த அபூர்வ நிகழ்வைக் காண்பதற்கும், அம்மனின் அருள்வாக்கைப் பெறுவதற்கும் நல்லாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement