Advertisement

மூடுவீங்களா? மாட்டீங்களா? கொதித்தெழுந்த பொதுமக்கள்!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கல்பாக்கம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாக அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், கல்பாக்கம் அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள இளையனார் குப்பம் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், அப்பகுதியில் பல ஆண்டுகளாக அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகவும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மது வாங்க வருவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

அதேபோல், மது குடித்துவிட்டு வரும் சிலர் அப்பகுதியில் வசிக்கும் இளம் விதவை பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த மதுக்கடையை அகற்றக் கோரி ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, உடனடியாக அந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனிடம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement