அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83 கோடி ரூபாய்க்கும் மேல்) வெகுமதி வழங்கப்படும் என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ‘இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் இன் இராக்’ (IRI) அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தத் திடுக்கிடும் அறிவிப்பு சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக்கிய விசைப்படைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலமாக இந்த 10 மில்லியன் டாலர் தொகை சேர்க்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அண்மையில் ஈராக் பிரதமருடனான சந்திப்பின் போது 2020 படுகொலை சம்பவத்தைத் தற்பெருமையுடன் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆயுதக் குழு, அதன் காரணமாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. டொனால்ட் டிரம்பை நேரடியாகக் கொல்பவர்கள் அல்லது அதற்குத் துணை போகும் தனிநபர்கள், அமைப்புகள் என எவராயினும் இந்த வெகுமதிக்குத் தகுதியானவர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் மீது கடந்த காலங்களில் பல்வேறு கொலை முயற்சிகள் நடந்துள்ள சூழலில், தற்போது ஈராக்கிய ஆயுதக் குழு நேரடியாகப் பில்லியன் கணக்கான பணத்தை வெகுமதியாக அறிவித்துள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.












