Advertisement

வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் திட்டத்தைக் கைவிட்டது தமிழக அரசு !

கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு சத்திய ஞானசபையின் புனித பெருவெளி நிலப்பரப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை முற்றிலும் கைவிட்டுள்ளதாகத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவெளி நிலப்பரப்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் காணும் புனித இடமான பெருவெளியில் இத்தகைய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டால், அதன் பாரம்பரியமும் புனிதத் தன்மையும் சீர்குலையும் எனக் கூறி சன்மார்க்கச் சங்கங்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

Advertisement

இவ்வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பெருவெளி நிலத்தில் எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனக் கடுமையான இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் பொருட்டுச் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான 71.24 ஏக்கர் புனித நிலப்பரப்பைச் சுற்றிப் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் மட்டும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த முக்கியப் பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது. வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கட்டும் திட்டம் கைவிடப்பட்ட செய்தி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement