தமிழகம் முழுவதும் விவசாயிகளையும், தோட்டக்கலைத் துறை களப்பணியாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் புதிய ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்ட’ அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தூணாக விளங்கும் தோட்டக்கலைத் துறையின் தனித்துவத்தைச் சிதைக்கும் வகையில் இப்புதிய திட்டம் அமைந்துள்ளதாகக் கூறி, மாவட்டத் தலைநகரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் ஒரு கள அலுவலருக்கு 3 கிராமங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நடைமுறையில் ஒரு களப் பணியாளருக்கு 8 முதல் 22 கிராமங்கள் வரை மிகக் கொடூரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதன் காரணமாக, 80 சதவீதத்திற்கும் அதிகமான களப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுக்கும், எல்லையற்ற பணிச்சுமைக்கும் ஆளாகியுள்ளனர். ஒரே அலுவலர் பல கிராமங்களையும், பல்வேறு விவசாயத் துறைகளையும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் முறையான மற்றும் துல்லியமான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளதால், இந்த மக்கள் விரோத அரசாணையைத் த.வெ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துத் தங்களது கோரிக்கைகளை வலுவாகப் பதிவு செய்தனர்.













