Advertisement

அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் திடீர் ஆய்வு: தூய்மைப் பணி ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் திடீர் ஆய்வு:

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து முறையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவா என்றும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கனிவோடு நடந்துகொள்கிறார்களா என்றும் கேட்டறிந்தார்.

Advertisement

ஆய்வின் ஒரு பகுதியாக, நோயாளிகள் சிகிச்சை பிரிவில் உள்ள கழிப்பறைகளை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு குப்பைகளும் கழிவுகளும் தேங்கிக் கிடப்பதைக் கண்டு அதிருப்தியடைந்த அவர், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை உடனடியாக அழைத்து விளக்கம் கேட்டார். “உங்களுக்குரிய ஒப்பந்தத் தொகை முறையாக வழங்கப்படும் போது, பணிகளை ஏன் சரிவரச் செய்யவில்லை? இனிமேல் இது போன்ற சுகாதாரக் குறைபாடுகள் நீடித்தால் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் நுழைந்த அமைச்சர், அங்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தரம் மற்றும் சமையலறையின் தூய்மை குறித்து ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட அவர், பொதுமக்களுக்குச் சுகாதாரக் கேடு விளைவிக்கும் இந்தச் சூழலை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ், “செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. அங்கு கூடுதலாகப் புதிய கட்டடங்களைக் கட்டுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது என்ற நோக்கில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இந்த மருத்துவமனையில் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இனிமேல் இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை பாயும்” என்று தெரிவித்தார்.

மேலும், சடலங்களை விடுவித்துப் பிணவறைக்குக் கொண்டு செல்லத் தனி வாகனங்கள் இல்லாததால், நோயாளிகள் பயன்படுத்தும் பேட்டரி வாகனங்களிலேயே சடலங்கள் கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகாருக்குப் பதிலளித்த அவர், மருத்துவமனையில் கூடுதல் பேட்டரி வாகனங்களின் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement