Advertisement

கூடுவாஞ்சேரியில் திடீர் மின்தடை: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட நீண்ட நேர மின்தடையை கண்டித்து, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள டிபன்ஸ் காலனி, ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் ஜூன் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மதியம் 2.30 மணியளவில் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், அதே நாள் இரவு 9.30 மணியளவில் மீண்டும் திடீரென மின்தடை ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

மின்தடை நீடித்ததால், அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய பதில் கிடைக்காததால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும், மின்வாரிய உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பழுதை உடனடியாக சரிசெய்து மின் விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக, இரவு 11.15 மணியளவில் மின் விநியோகம் மீண்டும் சீரானதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement