Advertisement

குட்கா விற்பனை: கூடுவாஞ்சேரியில் கடைக்கு சீல்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கண்டறியப்பட்ட பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கூடுவாஞ்சேரி நந்திவரம் காமராஜர்புரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நூர்திஷா (48) என்பவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து, கூடுவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 210 குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 45 ஹான்ஸ் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக கடைக்கு சீல் வைத்தார். மேலும், கடை உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement

இதனிடையே, நூர்திஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement