தமிழக முதலமைச்சர் விஜய் இன்னும் திரைப்படப் பாணியிலான சிந்தனைகளிலிருந்தும், வசனங்களிலிருந்தும் வெளிவரவில்லை என்றும், தனது நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் திமுக மீது திட்டமிட்டுப் பழிசுமத்தி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் தான் ஒரு கட்சியின் தலைவர் என்ற குறுகிய எண்ணத்திலேயே விஜய் பேசி வருவதாகச் சாடினார். தனக்குக் கீழ் இயங்கும் காவல்துறையையே அவர் குற்றம் சாட்டுவது தவறான முன்னுதாரணம் என்றும், தனது முதுகில் இருக்கும் கரைகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிபோடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் விமரிசித்தார். பிரச்சார மேடைகளில் வீர வசனம் பேசி வரும் முதல்வர், மேகதாது அணை குறித்துப் பேசாமல் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியவர், மேடைகளில் “ஓடு, ஓடு, ஓடு” எனச் சைகை காட்டிப் பேசும் விஜய், கரூர் அசம்பாவிதம் நடந்த அன்று அங்கிருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தகுந்த பதிலடி கொடுத்துள்ளதை நினைவூட்டினார். மேலும், கரூர் சம்பவத்திற்குக் தவெகவின் திரைப்படக் குழுவினரும் திட்டமிடப்படாத காலதாமதமுமே காரணம் என்பதைச் சிபிஐ விசாரணையே உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசும் முதல்வர் விஜய், மேடையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் போன்றவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று சாடினார். கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியதற்குப் பதிலளித்த சிவசங்கர், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே விஜய்யின் முதுகுதான் நினைவுச் சின்னமாக இருக்கிறது என்று மிகக் காரசாரமாக விமரிசித்தார். கரூர் சம்பவத்தால் தனது மனதில் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை என உருகும் முதல்வர், சம்பவம் நடந்து 285 நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் கரூருக்குச் சென்றுள்ளார் என்றும், இந்த இடைப்பட்ட நாட்களில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வீட்டுத் திருமண விழாக்கள், வெளிநாட்டு இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டு நடனமாடிய முதலமைச்சருக்கு, கரூருக்குச் செல்ல மட்டும் இத்தனை நாட்கள் ஏன் பிடித்தது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போதைய தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அக்கட்சியின் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ விஜய் சரவணன், ஆலந்தூர் பகுதி செயலாளர் வேம்புளி மற்றும் சேலம் மணிகண்டன் ஆகியோர் மீதான புகார்கள் குறித்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டினார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் லஞ்சம் கைமாறியுள்ளதாகத் தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞரே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற ஜனநாயக மரபுகள் தெரியாமல் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பைக் கிண்டல் செய்யும் முதல்வர் விஜய், ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் ஒருமுறைகூட நேராகப் பதிலளிக்காமல் காரின் கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு ஓடுபவர் என்றார். கற்பனை உலகத்தில் வாழ்ந்து வரும் முதல்வர் விஜய், பதவிக்கான நாகரிகத்தோடும் நிதானத்தோடும் செயல்பட வேண்டும் என்றும், வெறும் 107 தொகுதிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்ததை மறந்துவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்கான அரசாகச் செயல்பட வேண்டும் என்றும் சிவசங்கர் வலியுறுத்தினார்.












