Advertisement

“திடீரென வெடித்துச் சிதறிய டைல்ஸ்கள்” – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், தரைதளத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வரும் இரண்டாவது தளத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் பிரதான நடைபாதை மற்றும் அவர்களின் உறவினர்கள் அமரும் இடங்கள் அமைந்துள்ளன.

Advertisement

இன்று வழக்கம் போல் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் அப்பகுதியில் அமர்ந்திருந்த நிலையில், தரைப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் திடீரென பயங்கரமான சத்தத்துடன் பெயர்ந்து வெடித்துச் சிதறின. இதில் அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் பொதுமக்களும் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகக் கருதி அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் சூழலில், வெப்பத் தாக்கம் தாங்காமல் டைல்ஸ்கள் விரிசல் அடைந்து வெடித்தனவா அல்லது கட்டிடப் பணியின் போது தரமற்ற டைல்ஸ்களைப் பயன்படுத்தி அரைகுறையாகப் பணிகளை முடித்துச் சென்றனரா என்ற பலத்த சந்தேகமும் கேள்விகளும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, டைல்ஸ் வெடித்துப் பெயர்ந்த பகுதி முழுமையாகத் தடைசெய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உடனடித் தடுப்புகளை அமைத்த நிர்வாகத்தினர், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்த வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement