Advertisement

வடகடும்பாடியில் விடிய விடிய மின்தடை: மின்மாற்றியைச் சரி செய்ய முயன்றபோது நேர்ந்த பயங்கர விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வடகடும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டை மேட்டு காலனி பகுதியில் நேற்று இரவு முதல் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஆலத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்குப் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்ய மின்வாரியத் துறை அதிகாரிகள் யாரும் நீண்ட நேரமாகியும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மின்சாரம் வராததால் அவதியுற்ற அப்பகுதி மக்கள், அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் வீரராகவன் (வயது 51) என்பவரிடம் விபரத்தைக் கூறி பழுதைச் சரி செய்ய உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து, பழுதைச் சரி செய்வதற்காக திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றியில் ஏறுவதற்கு முன்பாக, மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்துவிட்டு வீரராகவன் மின்மாற்றியில் ஏறியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக மின்மாற்றியின் ஒரு தகடு மட்டும் மின் இணைப்பில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை எனக் தெரிகிறது. இதனால் அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில், மின்மாற்றியிலேயே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆலத்தூர் மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை முழுமையாகச் சரி செய்த பின்னர், மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்த வீரராகவனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரப் பழுதைச் சரி செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement