செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாகச் சரியாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் பூதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈசூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றிப் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO) அடுக்கடுக்கான கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இருப்பினும், அலட்சியம் காட்டிய அதிகாரிகள் எந்தவித தகுந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்துப் பெண்கள், இன்று தங்களின் காலி குடங்களை ஏந்தியவாறு மதுராந்தகம் – திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையில் ஈசூர் என்ற இடத்தில் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தத் திடீர் சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக, மதுராந்தகம் – திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் உடனடியாகச் சீரமைக்கப்படத் தகுந்த தீர்வு காணப்படும் எனப் போலீசார் உறுதியளித்தனர். காவல்துறையினரின் இந்த சமரச உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பான சூழலும் நிலவியது.












