Advertisement

தொழில் தொடங்கும் ஆர்வமா? சூப்பர் பயிற்சி கொடுத்த நிறுவனம்!

சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai Centre) தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கான இரு நாள் சிறப்பு பயிற்சி ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்றனர்.

Advertisement

அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்கும் முக்கிய தளமாக ஈசேவை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகாட்டும் நோக்கில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஈசேவை மையம் தொடங்குவதற்கான தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள், மைய நிர்வாகம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

Advertisement

பயிற்சியை வழிநடத்திய பாக்கியலட்சுமி, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, ஆவணங்களை பதிவேற்றம் செய்வது, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட நடைமுறை சார்ந்த விஷயங்களை நேரடி விளக்கங்களுடன் எடுத்துரைத்தார். மேலும், வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை, சேவை மனப்பான்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டு தெளிவு பெற்றனர். இதனால் பயிற்சி கலந்துரையாடல் முறையில் பயனுள்ள வகையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட சுப்பிரமணி, சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கிகளை அணுகும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து விரிவாக விளக்கினார். அவரது உரை தொழில் முனைவோராக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

பயிற்சியின் நிறைவில் பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெறப்பட்டன. இந்த பயிற்சி தங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியதுடன், சுயதொழில் தொடங்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மொத்தத்தில், ஈசேவை மையம் தொடங்கி சுயதொழிலில் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. இந்த பயிற்சி வகுப்பில் mychengai.com இணையதளத்தின் செய்தி ஆசிரியர் ஆர். உதயபாஸ்கர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement