Advertisement

“டாஸ்மாக் முறைகேடு வழக்கு:” செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர்!

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான ஆலைகளிடம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தது மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார் டெண்டர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தொடர் புகார்கள் வந்தன. இதனிடையே, இன்று காலை முதல் சென்னை, கரூர், கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

இச்சோதனையின் தொடர்ச்சியாகத் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), முதல் குற்றவாளியாக (A1) முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது குற்றவாளியாகத் (A2) டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எஸ். விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களைத் தவிர, டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்களான டி. ராமதுரை முருகன், ஆர். பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர், அவரது நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ் மற்றும் எஸ். கார்த்திக் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement

அதிகாரத் துஷ்பிரயோகம், சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மதுபான ஆலை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான சில அரசு அதிகாரிகளிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்குப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement