டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறித் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) உச்ச நீதிமன்றத்தில் அவசரக் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் உரிமங்கள் வழங்குதல், மதுபானக் கொள்முதல் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்புக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இன்று காலை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, கைதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, வழக்கை அவசரமாக விசாரிக்க முறையீடு செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் (Caveat) மனுவில், “செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது, லஞ்ச ஒழிப்புத் துறையின் தரப்பு விளக்கத்தையும் வாதங்களையும் முழுமையாகக் கேட்காமல் இடைக்காலத் தடையோ அல்லது எவ்வித சாதகமான உத்தரவையோ பிறப்பிக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அவசரக் கேவியட் மனு சட்டப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.













