Advertisement

“50 ஆயிரம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்!” – பொய் வழக்கால் கண்ணீர் சிந்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவர்!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பைத் தட்டிக்கேட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததோடு, வழக்கைத் தவிர்க்க 50,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிச் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மணம்மை ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் வழியில் உள்ள இடத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாங்கி மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களுக்குச் செல்லப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தானமாக வழங்கப்பட்ட பொதுப் பாதையையும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பலமுறை வலியுறுத்தியும் நிறுவனம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மணம்மை ஊராட்சி மன்றத் தலைவரான (திமுக) செங்கேணி நேரடியாகச் சென்று ரியல் எஸ்டேட் நிறுவனத் தரப்பிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் செங்கேணி மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருக்க, மாமல்லபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரசுராமன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் செங்கேணியிடம் 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் பணத்தைக் கொடுக்கச் செங்கேணி மறுத்ததால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மனவேதனையடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் செங்கேணி, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தார். அதில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்ட தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததோடு லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி ஆய்வாளர் பரசுராமன் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்களின் பாதையை மீட்கப் போராடும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண எளிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வியோடு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement