Advertisement

“மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!” – முதல்வர் விஜய்க்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கோரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அண கட்ட முயலும் விவகாரத்தில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் எம். வீரபாண்டியன், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநில அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், தமிழக எல்லையான ஒசூர் பகுதியிலும் டெல்டா மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மேகதாது அணை விவகாரம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கும் முதன்மைப் பிரச்சனையாகும் எனக் குறிப்பிட்டார்.

Advertisement

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி கர்நாடகா ஒருதலைப்பட்சமாகச் செயல்பட முயல்வது கண்டனத்திற்குரியது என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு இதில் உறுதியான சட்டப் போராட்டங்களையும், அரசியல் ரீதியான நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயச் சங்கங்களின் முதன்மைப் பிரதிநிதிகள் மற்றும் நீரியல் வல்லுநர்களை உடனடியாக அழைத்து, முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் ஒட்டுமொத்தக் குரலாக ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement