தஞ்சாவூர் கூட்டத்தில் ஆற்றிய பேச்சு தொடர்பாகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தில் நள்ளிரவு வரை தீவிர ஆலோசனை நடத்திய பிறகே கைது நடவடிக்கைக்குப் ‘பச்சைக்கொடி’ காட்டியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி வட்டாரங்கள் மூலம் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய வீடியோ காட்சிகள், தலைமைச் செயலகத்தில் மதிய உணவு இடைவேளையின்போது முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்துத் தனது நெருங்கிய வட்டார அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர், தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறையிடமும் இது தொடர்பில் விளக்கம் கேட்டறிந்தார்.
அதே நேரத்தில், உதயநிதியின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையானதை அடுத்து, தவெகவினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவிடத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்தில் தவெகவினர் அளித்த புகார் குறித்து மாவட்டக் காவல் துறை அதிகாரி மூலம் உடனடித் தகவல் மேலிடத்திற்குச் சென்றது. அப்போதே உதயநிதி ஸ்டாலின் காவல் துறையின் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
அன்று இரவு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை முடித்துவிட்டு முதலமைச்சர் விஜய் வீடு திரும்பியதும், அவரது இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று அவசரமாகக் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், அவரது முதன்மை ஆலோசகர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். உதயநிதியின் பேச்சு அடங்கிய வீடியோவை அனைவரும் ஆய்வு செய்தனர்.
ஆலோசனையின் போது, “சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தால், தாராளமாக நடவடிக்கை எடுங்கள்” என முதலமைச்சர் பச்சைக்கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்தால் மாநிலம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எனினும், நள்ளிரவு வரை நீடித்த இந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், “எந்தவித சவால்கள் வந்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்ளலாம்; உதயநிதி மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்” என முதலமைச்சர் உட்பட அனைவரும் ஒருமித்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி-க்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் நள்ளிரவிலேயே உஷார்படுத்தப்பட்டு அடுத்தகட்ட கைது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












