Advertisement
,

ஜனநாயகக் கடமையாற்ற சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, சென்னையில் வசிக்கும் சுமார் 19.5 லட்சம் மக்கள் கடந்த சில தினங்களாகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களைப் போன்று, தேர்தல் திருவிழாவிற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியதால் சென்னை மாநகரமே நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகச் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடந்து முடிந்த நிலையில், சென்னையில் தொழில் மற்றும் வேலை நிமித்தமாகத் தங்கியிருப்பவர்கள் வாக்களிக்கத் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 3 நாட்களில் வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 10,169 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement

இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் 6.27 லட்சம் பேரும், சுமார் 6,000 ஆம்னி பேருந்துகள் மூலம் 3.50 லட்சம் பேரும் என மொத்தம் 10 லட்சம் மக்கள் பேருந்துகள் வாயிலாகப் பயணம் செய்துள்ளனர். இதுதவிர, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்ட வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 9 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மற்றும் ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் சொந்தக் கார் வைத்திருப்பவர்கள் எனச் சுமார் 12,000 கார்களில் 60,000-க்கும் மேற்பட்டோர் சாலை மார்க்கமாகப் பயணம் செய்துள்ளனர்; இவ்வாறு ஒட்டுமொத்தமாகச் சுமார் 19.5 லட்சம் பேர் தேர்தலுக்காகச் சென்னையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Advertisement

மக்கள் பெருமளவில் ஊர்களுக்குத் திரும்பியதாலும், தேர்தல் விடுமுறை காரணமாகக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்ததாலும் சென்னையின் முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி நிசப்தமாகக் காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை மாநகரம், தேர்தல் நாளன்று வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவும் வெறிச்சோடியும் காணப்பட்டது ஜனநாயகத்தின் மீதான மக்களின் ஆர்வத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement