செங்கல்பட்டு நகரப் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில், மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததை தட்டிக்கேட்ட நபரைக் கடை ஊழியர் ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும், மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் அண்மையில் கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில கடைகளில் தொடர்ந்து பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாகக் குடிமகன்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு நகரப் பகுதியில் புலிப்பாக்கம் செல்லும் மேம்பாலத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வந்த நபர் ஒருவரிடம், மதுபாட்டிலின் அசல் விலையை விடக் கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் என ஊழியர் கேட்டுள்ளார். அரசின் உத்தரவைச் சுட்டிக்காட்டி அந்த நபர் கூடுதல் தொகை தர மறுத்ததோடு, எதற்காகக் கூடுதல் பணம் கேட்கிறீர்கள் என நியாயம் கேட்டு ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர், அந்த நபரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, “ஏய்” என ஒருமையில் பேசி மிரட்டும் தொனியில் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த முரட்டுத்தனமான மோதல் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது கைப்பேசியில் படம்பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு உத்தரவைத் துச்சமாக மதித்துக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் கொந்தளிப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.












