செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 15,968 மாணவர்களும், 15,948 மாணவிகளும் என மொத்தம் 31,916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும், 14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.40, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சதவீதம் 88.27 ஆக இருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ரீலேகா என்ற மாணவி 496 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதே போன்று தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவி அக்ஷயா மற்றும் குரோம்பேட் மார்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஷ்யாம் ஆகியோர் 496 மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஸ்ரீலேகா, இவரது தந்தை அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 99, கணக்கு பாடத்தில் நூற்றுக்கு 100, அறிவியல் பாடத்தில் 99, சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.













