செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையவழியில் தொடங்குகிறது.
🌐 ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளில் ஒன்றான சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Self Enumeration) பணிகள் வரும் 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறவுள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளம் https://se.census.gov.in
உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது குடும்பம் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை இணையவழியாக பதிவு செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
🏠 ஆகஸ்ட் 1 முதல் வீடு தோறும் கணக்கெடுப்பு
சுய பதிவு பணிகளைத் தொடர்ந்து, 01.08.2026 முதல் 30.08.2026 வரை வீடு தோறும் நேரடியாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் தொகுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,868 களப்பணியாளர்கள் மற்றும் 452 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
📋 ஒப்புதல் எண்ணை பணியாளர்களிடம் தெரிவிக்க அறிவுரை
சுய மக்கள் தொகை கணக்கெடுப்பை இணையத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒப்புதல் எண்ணை (Acknowledgement Number), வீடுகளுக்கு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தெரிவித்து பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் சுமூகமாக நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












