செங்கல்பட்டு நகர்ப் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், உரிய ஆவணங்களின்றி இயக்கப்படும் ஆட்டோக்களைக் கட்டுப்படுத்தவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில் போலிசார் முன்னிலையில் நடத்தப்பட்ட திடீர் வாகனத் தணிக்கையில், 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து பாதிப்புகளுக்கு, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாடா ஏஸ் (Tata Ace) ரக வாகனங்களே முக்கியக் காரணம் எனவும், அசாத்திய போக்குவரத்து விதிமீறல்கள் நடப்பதாகவும் செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, செங்கல்பட்டு நகரக் காவல் துறை அதிகாரிகளின் முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) இளங்கோ தலைமையில் திடீர் வாகனத் தணிக்கை வேட்டை களமிறக்கப்பட்டது.
இந்த அதிரடி சோதனையின் போது, அவ்வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களை அதிகாரிகள் மடக்கித் தீவிரமாகத் தணிக்கை செய்தனர். இதில், விதிமுறைகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு 9 பேர் முதல் 11 பேர் வரை அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள், ஓட்டுநர் உரிமம் (DL) இல்லாதது, தகுதிச் சான்று (FC) உள்ளிட்ட வாகன ஆவணங்கள் இல்லாதது மற்றும் காலாவதியான ஆட்டோக்கள் என மொத்தம் 10 வாகனங்கள் அதிகாரிகளிடம் கையும் களவுமாகச் சிக்கின.
விதிமீறலில் ஈடுபட்ட அந்த 10 ஆட்டோக்களையும் உடனடியாகப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு வாகனத்திற்குத் தலா ₹10,000 வீதம் மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த அசாத்திய மற்றும் திடீர் வாகனச் சோதனையானது, போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கடும் பீதியையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.













