Advertisement

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய கனரக லாரி; செங்கல்பட்டில் பொதுமக்கள் அவதி!

சென்னை பூந்தமல்லியில் இருந்து குடிநீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கி வந்த கனரக லாரி, செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில், பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்க ஓட்டுநர் நீண்ட நேரம் போராடியுள்ளார். இருப்பினும் லாரியை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் நான்கு மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு லாரி பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது.

Advertisement

இந்த சம்பவத்தால் வேதாச்சலம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், பணிக்காக தோண்டப்பட்ட பல பள்ளங்கள் இன்னும் முறையாக மூடப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

Advertisement

குறிப்பாக மழைக்காலங்களில் மற்றும் இரவு நேரங்களில் இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் கூட இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடுவதுடன், சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement