Advertisement

“குலதெய்வக் கோயிலுக்குச் சென்ற இடத்தில் பேரதிர்ச்சி!” – பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!

மனநிறைவோடு குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பிய குடும்பத்திற்கு வீடு வந்ததும் பேரதிர்ச்சி காத்திருந்த சம்பவமாக, செங்கல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் மகனின் கல்லூரிப் படிப்பிற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரைச் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைலாசநாதர் கோயில் தெருவில் வசித்து வரும் மளிகைக்கடை உரிமையாளர் சக்திவேல் என்பவர், நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்குக் கடாவெட்டு வழிபாட்டிற்காகச் சென்றிருந்தார். வழிபாடு நிறைவடைந்ததும் இரவே ஊர் திரும்பாமல் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்த உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

Advertisement

இன்று காலை வழக்கம்போல் கடையைத் திறப்பதற்காகச் சக்திவேல் மட்டும் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்து பதறியடித்தபடி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணமானது சக்திவேல் தன் மகனின் கல்லூரிப் படிப்பிற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த கட்டணப் பணமாகும். தன் பிள்ளையின் எதிர்காலத்திற்காகச் சேர்த்த பணம் ஒரே இரவில் பறிபோனதைக் கண்டு அக்குடும்பத்தினர் நிலைகுலைந்து கதறி அழுத காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது.

இச்சம்பவம் குறித்துச் சக்திவேல் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகரக் காவல் நிலையப் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு விசித்திரமான சம்பவமும் தெரியவந்துள்ளது. திருட வந்த இடத்தில் திருடனின் லுங்கி கிழிந்துவிட்டதால், அவன் அந்த கிழிந்த லுங்கியை அங்கேயே கழற்றிப் போட்டுவிட்டு, வீட்டு உரிமையாளர் சக்திவேலின் சட்டை மற்றும் பேண்ட்டை அணிந்துகொண்டு தப்பிச் சென்றுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றித் தப்பி ஓடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்மீக வழிபாட்டிற்குச் சென்ற இடத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement